Friday, January 17, 2014

குரங்கு மனம்

வந்து சென்றது
தந்து சென்றதையும் 
வரப் போவது 
தரப் போவதையும் 
நடப்பை மறந்து 
கிடந்தது நினைக்கும் 
மனம் ஒரு குரங்கு

*****

ஒரு கோப்பை தத்துவம்



அடி மனத்தின் கசப்புகள்
அங்கங்கே இருந்தாலும்
அன்பெனும் பால் கலந்து
அற்புதமாய் சுவை கூட்டும்
தித்திக்கும் சர்க்கரை
திகட்டாத காதலாகி
இரு இதயம் இணைத்திடும்
ஒரு கோப்பை coffee சொல்லும்
இல்லறத்தின் இனிமை தனை !

*****

Saturday, December 29, 2012

அஞ்சலி

பாரதப் பெண்ணே...
வீழ்ந்தது நீ 
விழித்தது தேசம் 

இளைய இந்தியா 
இன்று ஏந்திய மெழுகுவத்தி 
அகத்தின் இருள் 
அகல வழி தேடி 

 கபடதாரிகள் நாம் 
கருத்து பேதங்கள் பல 
கண்ணாடி வீடு நமது 
கல்லெறிவோம் மற்றவர் மீது 

விழித்தெழுவதும் மீண்டும் 
உறங்கச்செல்வதும் புதிதல்ல 
'நமதை' விட 'எனதை'
பெரிதெனக்  கருதும் நமக்கு 

இப்போதும் உறங்கிவிடுவோம் 
இரண்டொரு வாரங்களில் 

சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு 
சிறியதொரு கேள்வி 
இன்னும் எத்தனை தங்கமகள்களை 
இழக்க வேண்டும் நம் பாரதத்தாய்?

எத்தனை இழப்புகளுக்குப்பின் 
மொத்தமாய் விழிப்போம் நாம்?

விடை தேடுவோம் 
வெளியில் அல்ல 
ஒவ்வொருவரும் நமக்குள் 
ஒளி பிறக்கும் அக இருள் மறைய.

--
Jeeva

Tuesday, October 5, 2010

நீ... நான்... நாம்...

உனக்கும் - எனக்கும்,
நமக்கும்
ஒரே வித்தியாசம்
இதயங்களின் இடைவெளி!

*****

Sunday, May 30, 2010

மின்னணு மாயலோகம்...

நன்றி - http://www.thehindu.com


ஆறே ஆறு தெருக்களில்
ஆயிரத்திற்கும் மேல் அங்காடிகள்
ஒவ்வொன்றின் மதிப்பும்
ஒரு சில லட்சங்களாவது பெறும்

நடைபாதை வியாபாரம் முதல்
குளிர்சாதன வளாகம் வரை
அனைவருக்கும் இடம் உண்டிங்கே

சில்லு முதல் கணினி வரை
மின்னணு சாதனங்கள்
கொட்டி கிட[டை]க்கும் இங்கே

சென்னையின் இதயமான அண்ணா சாலையில்
மின்னணு சாதனங்களுக்கான பிரத்யேகப் பகுதி
சென்னைவாசிகள் பலருக்கு
நன்கு அறிமுகமான "Ritchie Street"

பேசத் தெரியாதவர்களுக்கு
இது இடம் அல்ல -
வியாபாரி ஆனாலும்
வாடிக்கையாளர் ஆனாலும்

போலிகளுக்கு மத்தியில்
அசலைக் கண்டு கொள்ளும்
வல்லவரா நீங்கள்?
இது உங்களுக்கான இடம்!

வானொலி சந்தையாக உதித்தது
மின்னணு மாயலோகமாக ஒளிர்கிறது

இன்று நடப்பதற்குக் கூட
இடமின்றி இருக்கும் தெரு
பேருந்து வழித் தடமாம்
முன்பொரு காலத்தில்

ஒவ்வொரு முறை இங்கு
வரும் போதும்
புதிதாகவும் புதிராகவுமே
இருக்கும் எனக்கு

"கற்றது கையளவு"
வேறென்ன சொல்ல?

*****

பி.கு: ஒரே ஒரு நாள் Ritchie street ல் மூன்று மணி நேரம் அலைந்ததின் பாதிப்பு இது. எனது பல முற்றுப் பெறாத () முடிக்க இயலாத கிறுக்கல்களில் இதுவும்ஒன்று ;-)

Monday, May 3, 2010

காதல் வள்ளலார்

நன்றி: www.webshots.com


பசித்திரு,
தனித்திரு,
விழித்திரு!
காதலில் விழுந்தாரோ
வள்ளலாரும் கூட?


*****

Thursday, December 24, 2009

என்று தணியும் ...?

"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்
திருமணங்களுக்கு,
பக்காவாக அச்சடிக்கப்படும்
அழைப்பிதழ்கள் இங்கு."

எனப் பெருமை பேசிய மேனகாவில் தான்
அடிக்கக் கொடுத்திருந்தேன்
எனது திருமண அழைப்பிதழையும்.

சொன்ன தேதியில்,
சொன்ன நேரத்தில்,
சிறப்பாகத் தயாராகியிருந்தன
அழைப்பிதழ்கள் பெட்டிக்குள்.

திருப்தியுடன் காரைக் கிளப்பி
சாலையை எட்டிப் பிடிக்கையில் தான்
பாதையின் நடுவே நின்ற
அந்த மூவரைப் பார்த்தேன்

ஒருவனுக்கு முப்பது இருக்கும்
இரு சிறுவர்கள் அவனுடன்
பாதையை மறித்தமர்ந்து
கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்.

அருகில் ஒரு தண்ணீர் கேன்,
சிறிதளவு தண்ணீருடன்.
நடுவில் எதையோ வைத்து
சுற்றி அமர்ந்திருந்தனர்.

வீடு திரும்பும் அவசரத்தில் இருந்தவன்
ஹாரனில் வைத்த கை எடுக்கவில்லை.
காரியத்தில் மும்முரமான மூவரும்
ஏறிட்டும் பார்க்கவில்லை அந்த ஒலியை.

ஒலியெழுப்பி ஓய்ந்தபின்
குரல் கொடுத்தேன்
வழியை விட்டு
ஒதுங்கிசெல்லக் கேட்டு.

தலை தூக்கிப் பார்த்தவன்
தலை குனிந்து மீண்டும்
சிறுவர்களுடன் இணைந்து
காரியத்தில் கண்ணானான்

நான் வெறுத்துப் போன நொடியில்
தானாக எழுந்து நகர்ந்தனர் மூவரும்
முகத்தில் ஒரு நிம்மதியுடனும்,
உதட்டில் ஒரு சிரிப்புடனும்!

அப்போது தான் கவனித்தேன்
அது வரை அவர்கள் செய்ததை.
வெட்கத்தில், வெறுப்பில்
வெறுமையை உணர்ந்தேன்

வெட்கம், அவசரத்தில் கோபப்பட்ட என்னால்!
வெறுப்பு, காரணமில்லாமல் மீண்டும் என் மேல்!
வெறுமை, நான் கண்ட நிகழ்வுக்கு
தீர்வு ஏதும் தெரியாமல்!!

அந்த இடத்தில் இருந்தது
ஒரு இளநீரின் பாதி!
அந்த பாதியில் இருந்தது
சிறிது தேங்காய் மீதி!!

நடந்ததை ஜீரணித்துக் கொண்டு
நான் திரும்பிப் பார்க்கும் முன்
மூவரும் சென்று விட்டிருந்தனர்
அந்தத் தண்ணீர் கேனுடன்!!!

*****

பி.கு: படம் பிடித்து இந்தக் காட்சியை நிரந்தரமாக்க மனம் ஒப்பாததால் படமின்றி பதிக்கிறேன் கனத்த இதயத்துடன்...