நன்றி: www.indiabroadband.netஅக்டோபர் நவம்பர் மாதங்களின்
அன்றாட நிகழ்வாகிப் போய் விட்டது
அயராமல் பெய்யும் மழையும்,
அதனால் தவிக்கும் சென்னையும்!
வருடம் முழுவதும்
ஒரு குடம் தண்ணீருக்கு
ஆலாய்ப் பறந்தாலும்
"பாழாய்ப் போன மழை"
எனத் திட்டாமல் இருக்க
முடியவில்லை நம்மால்
இருந்தாலும்
இல்லாவிடினும்
நீரால் நமக்குத்
தொல்லை தானோ?
சொந்த ஊரிலேயே
அகதி வாழ்க்கை சிலருக்கு.
எந்தப் பிறவியின் மிச்சம்?
சகதி நடுவில் யோசிக்க நேரமில்லை!
கொட்டும் மழையில் மட்டும்
போர்க்கால அவசரத்தில் இயங்கும்
எங்கள் அரசு எந்திரத்திற்கு
மீதி பத்து மாதங்கள் விடுப்போ?
சாலைத்துறைக்கும் மழைக்கும்
எங்களூரில் ஏழாம் பொருத்தம்.
எங்கள் மழைக்கால சாலைகளில்,
நிலவை விட பள்ளங்கள் அதிகம்!
மழைக்கு பள்ளிகளில் ஒதுங்கிய காலம்
மலையேறித்தான் போய் விட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால்
சொல்லி வைத்தாற்போல் மழை நிற்கும் காலமிது!
நாளிதழ் செய்திகளில் மட்டும்
நல்ல முன்னேற்றம்.
'சென்னை மிதக்கிறது' - சென்ற வருடம்
'சென்னை தத்தளிக்கிறது' - இந்த வருடம்
அடுத்த வருடம்?
கேள்விக்குறியுடன் சென்னைவாசி!
"நீரின்றி அமையாது உலகு" -
உண்மை தானோ பெரியோர் வாக்கு?
*****
