Thursday, December 24, 2009

என்று தணியும் ...?

"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்
திருமணங்களுக்கு,
பக்காவாக அச்சடிக்கப்படும்
அழைப்பிதழ்கள் இங்கு."

எனப் பெருமை பேசிய மேனகாவில் தான்
அடிக்கக் கொடுத்திருந்தேன்
எனது திருமண அழைப்பிதழையும்.

சொன்ன தேதியில்,
சொன்ன நேரத்தில்,
சிறப்பாகத் தயாராகியிருந்தன
அழைப்பிதழ்கள் பெட்டிக்குள்.

திருப்தியுடன் காரைக் கிளப்பி
சாலையை எட்டிப் பிடிக்கையில் தான்
பாதையின் நடுவே நின்ற
அந்த மூவரைப் பார்த்தேன்

ஒருவனுக்கு முப்பது இருக்கும்
இரு சிறுவர்கள் அவனுடன்
பாதையை மறித்தமர்ந்து
கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்.

அருகில் ஒரு தண்ணீர் கேன்,
சிறிதளவு தண்ணீருடன்.
நடுவில் எதையோ வைத்து
சுற்றி அமர்ந்திருந்தனர்.

வீடு திரும்பும் அவசரத்தில் இருந்தவன்
ஹாரனில் வைத்த கை எடுக்கவில்லை.
காரியத்தில் மும்முரமான மூவரும்
ஏறிட்டும் பார்க்கவில்லை அந்த ஒலியை.

ஒலியெழுப்பி ஓய்ந்தபின்
குரல் கொடுத்தேன்
வழியை விட்டு
ஒதுங்கிசெல்லக் கேட்டு.

தலை தூக்கிப் பார்த்தவன்
தலை குனிந்து மீண்டும்
சிறுவர்களுடன் இணைந்து
காரியத்தில் கண்ணானான்

நான் வெறுத்துப் போன நொடியில்
தானாக எழுந்து நகர்ந்தனர் மூவரும்
முகத்தில் ஒரு நிம்மதியுடனும்,
உதட்டில் ஒரு சிரிப்புடனும்!

அப்போது தான் கவனித்தேன்
அது வரை அவர்கள் செய்ததை.
வெட்கத்தில், வெறுப்பில்
வெறுமையை உணர்ந்தேன்

வெட்கம், அவசரத்தில் கோபப்பட்ட என்னால்!
வெறுப்பு, காரணமில்லாமல் மீண்டும் என் மேல்!
வெறுமை, நான் கண்ட நிகழ்வுக்கு
தீர்வு ஏதும் தெரியாமல்!!

அந்த இடத்தில் இருந்தது
ஒரு இளநீரின் பாதி!
அந்த பாதியில் இருந்தது
சிறிது தேங்காய் மீதி!!

நடந்ததை ஜீரணித்துக் கொண்டு
நான் திரும்பிப் பார்க்கும் முன்
மூவரும் சென்று விட்டிருந்தனர்
அந்தத் தண்ணீர் கேனுடன்!!!

*****

பி.கு: படம் பிடித்து இந்தக் காட்சியை நிரந்தரமாக்க மனம் ஒப்பாததால் படமின்றி பதிக்கிறேன் கனத்த இதயத்துடன்...

Tuesday, November 10, 2009

மழைக்காலச் சென்னை

நன்றி: www.indiabroadband.net


அக்டோபர் நவம்பர் மாதங்களின்
அன்றாட நிகழ்வாகிப் போய் விட்டது
அயராமல் பெய்யும் மழையும்,
அதனால் தவிக்கும் சென்னையும்!

வருடம் முழுவதும்
ஒரு குடம் தண்ணீருக்கு
ஆலாய்ப் பறந்தாலும்
"பாழாய்ப் போன மழை"
எனத் திட்டாமல் இருக்க
முடியவில்லை நம்மால்

இருந்தாலும்
இல்லாவிடினும்
நீரால் நமக்குத்
தொல்லை தானோ?

சொந்த ஊரிலேயே
அகதி வாழ்க்கை சிலருக்கு.
எந்தப் பிறவியின் மிச்சம்?
சகதி நடுவில் யோசிக்க நேரமில்லை!

கொட்டும் மழையில் மட்டும்
போர்க்கால அவசரத்தில் இயங்கும்
எங்கள் அரசு எந்திரத்திற்கு
மீதி பத்து மாதங்கள் விடுப்போ?

சாலைத்துறைக்கும் மழைக்கும்
எங்களூரில் ஏழாம் பொருத்தம்.
எங்கள் மழைக்கால சாலைகளில்,
நிலவை விட பள்ளங்கள் அதிகம்!

மழைக்கு பள்ளிகளில் ஒதுங்கிய காலம்
மலையேறித்தான் போய் விட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால்
சொல்லி வைத்தாற்போல் மழை நிற்கும் காலமிது!

நாளிதழ் செய்திகளில் மட்டும்
நல்ல முன்னேற்றம்.
'சென்னை மிதக்கிறது' - சென்ற வருடம்
'சென்னை தத்தளிக்கிறது' - இந்த வருடம்

அடுத்த வருடம்?
கேள்விக்குறியுடன் சென்னைவாசி!
"நீரின்றி அமையாது உலகு" -
உண்மை தானோ பெரியோர் வாக்கு?

*****

Friday, October 2, 2009

ஒரு வேண்டுகோள்

நன்றி: http://ritemail.blogspot.com


இன்னும் சிறிது நேரம்,
எந்தப் புறம் விழுவது?
முடிவு செய்யவில்லை நான்.

சொல்லப் போனால்
முடிவெடுக்கும் அதிகாரம் உண்டா
எனத் தெரியவில்லை எனக்கு.

ஒன்று மட்டும் நிச்சயம்
நான் விழும் வேளையில்
இங்கிருக்க மாட்டான் இந்த சிறுவன்

மரம் வெட்டி
மீண்டும் வரும் வரை
என்னால் நிற்க முடியுமா தெரியவில்லை

ஒரு வேளை முடியாமல் போனால்?
சிறுவனே, என் காயத்தைப் பார்த்து போதும்
தள்ளி நில்லேன் சிறிது நேரம்

ஹ்ம், நான் ஒரு மரமண்டை
எந்த மனிதனுக்கு என் குரல் கேட்டிருக்கிறது
இவனுக்கு கேட்டிட?

என்ன,
உங்களுக்கு கேட்கிறதா
என் குரல்?

அது சரி, இருக்கும் போது
ஒன்றின் அருமை தெரியாத
மனிதர் தானே நீங்களும்?

*****

Friday, September 25, 2009

முதல் வணக்கம்

நன்றி - http://www.visualforces.com


போகிற போக்கில் கடவுளுக்கு ஒரு வணக்கம்
உணவருந்தும் போது அருகில் ஒரு புத்தகம்
கணிணியில் தட்டிக் கொண்டே தொலைக்காட்சியில் ஒரு கண்ணும்
தசாவதாநிகளுக்கானது இந்த ஒரு யுகம்

நிற்க நேரமின்றி ஓடுகிறேன்
தேவை என்ன என அறியாமல்
அத்தனைக்கும் ஆசைப்படுகிறேன்
இழப்பது எதை எனத் தெரியாமல்

சோர்வுற்று இளைப்பாறும் வேளைகளில்
திரும்பிப் பார்த்தால்
புழுதி மட்டுமே பறக்கிறது
நான் வந்த பாதையில்

என் படங்கள் இல்லாவிடினும்
நான் கடந்த பாதையில்
சில மலர்களாவது பூத்துக் குலுங்க
என் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று

படம் பார்த்து கதை சொல்வது
எனக்குப் பிடித்த ஒன்று
படம் பார்த்து கவிதை சொல்ல
முயல்கிறேன் இங்கு

வேகமாக ஓடும் காலமும் - அதை விட
வேகமாக ஓடும் மனிதர்களும்
பழகிப் போன எனக்கு இது கால நிறுத்தம்,
சில மணித் துளிகளே ஆனாலும்!

படம் பார்த்து கவிதை சொல்ல,
கவிதையைப் போல
படம் பார்க்கையில் எல்லாம்
ஒரு பூ பூக்கும் இந்த தளத்தில்.

*****